A persons report
இல்லாதவர்களைப் பற்றி சிந்திக்க சில நேரம் அவசியம் வந்து விடுகிறது!
சமீபத்தில் மனைவி வழி உறவினரில் ஒரு மூத்த உறுப்பினர் மறைந்தார். மனைவிக்கு அவர் மேல் மிகுந்த ப்ரியம். கோவிலுக்கு போகும்போது இறைவன் பிரதிமை மேல் அவர் உருவம் தெரிந்ததாகச் சொன்னார்!
சமீபத்தில் மனைவி வழி உறவினரில் ஒரு மூத்த உறுப்பினர் மறைந்தார். மனைவிக்கு அவர் மேல் மிகுந்த ப்ரியம். கோவிலுக்கு போகும்போது இறைவன் பிரதிமை மேல் அவர் உருவம் தெரிந்ததாகச் சொன்னார்!
சில
வருடங்கள் முன்பு நான் வீட்டில் தனித்திருந்த சமயம். எல்லோரும் வெளியூர்
சென்றிருந்தார்கள். இரவு பன்னிரண்டரை மணி இருக்கும். தூக்கத்தில்
இருந்தேன். கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த என் மச்சினன் ஒருவன்
"கொஞ்சம் தள்ளிப் படுத்துக்கோங்க அத்திம்பேர்" என்று சொன்ன மாதிரி
இருந்தது. தள்ளிப் படுத்துக் கொண்டு விழித்துக் கொண்டேன். யாரையும்
காணோம். ஏதோ பிரமை என்று திரும்ப தூங்க முற்பட்டேன்.
நீங்கள் நினைப்பது சரிதான்...ஃபோன் அடிக்கத் தொடங்கியது. எடுத்தேன்.
ஏதோ
ஜுரம் என்று ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டிருந்த (அதுவே எனக்குத்
தெரியாது) என் மச்சினன் எதிர்பாரா விதமாக சற்றுமுன் இறந்து போனதாக தகவல்
வந்தது. அப்புறம் தூங்குவதற்கு ரொம்ப நேரம் ஆனது! (காலை கிளம்பிப் போனேன்)
ஆத்மாவுக்கு
ஆதியும் கிடையாது, அந்தமும் கிடையாது என்பார்கள். உடல்தான் அழிகிறது ஆத்மா
கர்மபலன்களை அனுபவித்து விட்டு அடுத்த உடலில் புகுவதற்குத் தயாராகி
விடுகிறதாம். இறந்தவர்கள் உயிருடன் இருப்பவர்களை தொடர்பு கொள்ள
முயற்சிப்பார்கள் என்றும் சொல்வார்கள்.
முந்தின ஜென்மம் ஞாபகம் வந்த இந்த ஜன்மத்துக்காரர்கள் பழைய இடங்களைத் தேடி அலைந்ததையும் படித்திருக்கிறோம்.
வட
நாட்டில் குடியானவச் சிறுவன் ஒருவன் வேற்று பாஷை பேசி வந்ததையும் அப்புறம்
அர்த்தம் தெரிந்த போது தன்னுடைய தாய், தந்தை, மனைவி பல கிலோ
மீட்டர்களுக்கு அப்பால் உள்ள ஊரில் இருப்பதாகவும் சொல்லி வந்தானாம். அங்கே
போய்ப் பார்த்த பொழுது அது உண்மை என்று தெரிந்ததோடு, அந்த வீட்டில் இருந்த
வாலிபன் மாட்டு வண்டியில் வந்த போது கனரக வாகனம் மோதி இறந்ததாகவும் அப்போது
பட்ட காயத்தின் வடு இந்த சிறுவனின் உடலில் பிறந்தது முதல் இருந்ததாகவும்
படித்திருக்கிறேன்.
கிட்டத் தட்ட இதே போல சம்பவத்தை நேற்று டிஸ்கவரி சேனலில் கூட காட்டினார்கள். அவன் ஒரு ஸ்ரீலங்காச் சிறுவன்.
ஆத்மா
விரைவில் அடுத்த சட்டை போட்டு விடும் நிலையில், அதாவது அடுத்த உடம்பில்
புகுந்து விடும் என்றால் எப்படி தற்போதைய உறவினர்களைத் தொடர்பு கொள்ளும்?
சில பல பிறவிகளை எடுத்த ஆத்மா தொடர்பு கொள்ள அழைத்தால் எந்த கணவன் எந்த
மனைவி என்று குழம்பிப் போகாதா?
ஒரு பழைய அனுபவம்...
விடுமுறை நாள்..
அலுவலகத்தில் யாரும் இல்லை. பகல் நேரம்தான். காலை பதினோரு மணிக்குமேல் இருக்கும்.
உட்கார்ந்து
வேலை செய்து கொண்டிருக்கும்போது முன் ஹாலில் இருந்து ஏதோ சத்தம். கதவை
லேசாக அறைந்து சாத்துவது போல.. தொடர்ந்து யாரோ நடந்து வருகிறார்களோ என்று
மிக லேசான சத்தம் அல்லது பிரமை.
இரண்டு
மூன்று முறை அபபடி ஆனதும் எழுந்து போய் பார்த்தேன். நீண்ட ஹால். எல்லா
அறைக் கதவும் மூடியிருந்தன. முன் வாசல் மூடி உட்புறம் தாழிடப்
பட்டிருந்தது. பாத் ரூம் வரை சென்று உள்ளே யாரும் இருக்கிறார்களா என்றும்
பார்த்து விட்டு, ஜன்னல் கதவுகள் சரியாகத் தாழிடப் பட்டிருக்கின்றனவா
என்றும் சோதித்துத் திரும்பினேன். ஒரு அறையைத் தாண்டும்போது வித்யாசமான
வாடை ஒன்றை நாசி உணர்ந்தது.
உட்கார்ந்து
பதினைந்து நிமிடத்தில் மீண்டும் சத்தம். கதவை வேலை முடிந்து யாரோ மூடிப்
பூட்டுவது போல ஆனால் தெளிவில்லாமல். நான் எனக்கு வந்த அழைப்பில்
அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தேன். யாரோ வருவது போல உணர்வு. திரும்பி
ஹாலைப் பார்த்தால் யாரும் இல்லை!
தொலைபேசியில்
பேசிய நண்பரிடம் சொன்னேன். சிரித்தார். சமீபத்தில் அலுவலகத்திலேயே
செத்துப் போன இரண்டு அலுவலர்களின் பெயர்களைச் சொன்னார்.
பேசிக் கொண்டே மீண்டும் எழுந்து செக் செய்து திரும்பினேன்.
"யார் கூடவாவது பேசிக் கொண்டே வேலை செய்தால் இப்படி பிரமை இருக்கும்..வைத்து விட்டு வேலையைப் பார்" என்றார்.
வைத்து
விட்டு வேலையைத் தொடர்ந்தேன். மறுபடி யாரோ நடமாடுவது போல, ஜன்னலில் நின்று
என்னை நோக்குவது போல உணர்வு. நிமிர்ந்து பார்த்தால் யாரும் இல்லை.
வேலையைத் தொடர்ந்தாலும் ஒரு சிறு அவஸ்தை இருந்தது.
எழுந்து
கதவைத் திறந்து வெளியில் வந்து சாலையை நோக்கினேன். நார்மல். எல்லோரும்
அவரவர் வேலையில் ஆழ்ந்திருந்தார்கள்.... இயல்பாக. அந்த வெளிச்சமும்
சுறுசுறுப்பும் பார்த்தபோது உள்ளே உணர்ந்த அனுபவம் அபத்தமாக இருக்கவே,
மறுபடி அறைக்குத் திரும்பினேன்.
மீண்டும்
மீண்டும் இதே அனுபவம். மறுபடி நண்பர் தொலைபேசி நிலைமையைக் கேட்க,
சொன்னேன். பேசாமல் கிளம்பிச் சென்று விடு என்றார். கிளம்பி சாவியை எடுக்க
முன்னறைக்கு சென்றால் என் முதுகில் மூச்சு விடும் உணர்வு. திரும்பினால்
யாரும் இல்லை.
கதவைப் பூட்டி விட்டுக் கிளம்பி விட்டேன். பூட்டும்போது கூட முதுகுக்குப் பின்னால் ஒரு குறு குறு...
பிறகு தொடர்ந்த நாட்களில் பழகி விட்டது. மற்ற ஊழியர்களும் ஒரொரு சமயம் இது மாதிரி உணர்ந்திருப்பதாகச் சொன்னார்கள்.
மருத்துவமனையில்
பணிபுரியும் என் சகோதரியிடம் இதைப் பகிர்ந்து கொண்ட போது பிரசவ வார்டின்
அருகிலும், ஆபரேஷன் தியேட்டர் உள்ளும் சில சமயம் யாரும் இல்லாத இடத்தில்
கேட்கும் அழுகுரல்கள் பற்றி சொன்னாள்.
இன்னொரு
நண்பர் அவர் பங்குக்கு உதகை அலுவலகத்தில் வேலைபார்த்தபோது இரவில் தங்கி
வேலை பார்த்த ஒரு சந்தர்ப்பத்தில் வந்த அனுபவம் சொன்னார்.
பற்பல
வருடங்களுக்கு முன்னால் செத்துப் போன எட்டாம் ஹென்றி அந்த அரண்மனையில்
வேலை பார்த்த காவலாளிகளை தீ விபத்து ஏற்படாமல் அரூபமாய் எச்சரித்த
சம்பவத்தை டிஸ்கவரியில் காட்டினார்கள். செக்யூரிட்டி அறையைப் படமெடுக்கும்
கேமிரா ஒரு தொப்பி அணிந்த நிழலுருவத்தின் நடமாட்டத்தைப்
படமெடுத்திருப்பதைக் காட்டினார்கள்.
இத்தனை வருடங்களாக அவர் மறுபிறவி எடுக்காமல் இருக்கிறாரா? சொர்க்கத்துக்கோ நரகத்துக்கோ போகாமல் இருக்கிறாரா?
0 comments