நடுக்காட்டில் நடந்தது என்ன.? -ஒரு அமானுஷ்ய திகில் ரிப்போர்ட்

By 04:17

என் பெயர் செந்தில்குமார். வயது 31. என் அனுபவக்கதை ஒன்றை உங்களிடம்
சொல்ல ஆசைப்படுகிறேன்.. இது திக்...திக்... திகில். 

இன்றைக்கு 14 வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம் இது. ஊரின் முதல்
தெருவில் எங்கள் ஓட்டு வீடு இருந்தாலும் அருகில் இருந்த வீடுகள் ஏதோ ஓர்
இயற்கைச்சீற்றத்தாலும் பஞ்சம் பிழைக்க வெளியூர் சென்றவர்களாலும் ஆமை புகுந்ததால் ஆத்திரப்பட்டு இடிக்கப் பட்டுமென இருபக்கங்களிலும்
வீடுகளின்றி புதர் மண்டி காட்டுக்கு நடுவில் இருப்பதைப் போல இருக்கும்.

காடுகளில் வளர்ந்த பிள்ளைகளின் இயல்பு இரண்டு வகைப்படும். ஒன்று அவர்கள் பேய், பிசாசுக்கெல்லாம் பயப்பட மாட்டார்கள். 
இரண்டு நிழலைக்கண்டே மிரளுவார்கள். நான் இரண்டாம் வகை என்பதை உங்களிடம் சொல்லிவிடுவதுதான் நல்லது.(இந்த இடத்தில் உங்கள் மைண்ட்வாய்ஸ் சத்தமாக கேட்டுத்தொலைப்பதால்
அதை தயை கூர்ந்து மியூட்டிவிடுங்கள்). இப்போது எதிர் விட்டிலிருக்கும்
(சுமார் 100 அடி) ஆறு விரல் ஆறுமுகத்தைப் பார்ப்போம்.

எங்கள் குடும்பத்தைவிட வீரவரலாறு கொண்டது அவன் குடும்பம். மூன்று
தலைமுறைக்குமுன் இங்கு வந்தவர்கள் அவர்கள். கடன் பெருகி தெருவில்
வழிந்தோடும் நிலையில் வீட்டில் ஆள் இருப்பதைப் போல பானைகளை அடுக்கி விளக்கையும் ஏற்றிவிட்டு இரவோடிரவாக எங்கள் ஊருக்கு வண்டிகட்டி வந்தவராம் ஆறுவின் கொள்ளுத்தாத்தா. 

பங்காளிகளின் சண்டைகளைவிட சம்பந்தி சண்டைகளிலேயே
இந்த வரலாறுகளை நாம் அறியமுடியும். அவர்கள் குடும்பத்திற்கென்று பிரத்யேக கத்தி ஒன்று இருக்கிறது. எப்போதும் தீட்டியிராத மூன்றடி நீளமுள்ள கருப்பான வாள் போன்றது. சின்னச்சின்ன சண்டைகளுக்கெல்லாம் அதை வெளியே எடுத்து அதன் மானத்தையும் பரம்பரை வீரத்தையும் ஆறுமுகம் எடைக்குப் போட்டு பேரீச்சம்பழம் வாங்கியிருக்கிறான்.

எட்டாவது படிக்கும் ஆறுக்கும் +2 எனக்கும் (எஸ்ஸுக்கும் - ஆறு என்னை
எஸ்ஸு என்று கூப்பிடுவது வழக்கம்) உறவுமுறையே மாமன் மச்சான் தான்.
இருந்தாலும் இணந்த கைகள் போன்ற நட்பிற்கு காரணம் ஒன்றுதான். பகலில்
எங்களுக்கு பயமே கிடையாது இரவில் எங்களுக்கு தைரியமே கிடையாது. 

இது இப்படி இருக்க ஆறு அழுக்காகவே இருக்கும் லாரி க்ளீனர் வேலைக்குப் போனான். நான் செங்கல்பட்டிலிருக்கும் கல்லூரிக்கு வணிகவியல் படிக்கப் போனேன்.

பிந்துலவ் என்று பசங்களாலும் பெருமாளு என்று பெற்றவர்களாலும் அழைக்கப்பட்ட பெருமாளுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. திருமணத்திற்கு ஒருநாள் முன்னர் குடித்துவிட்டு தீயசக்தியில் வந்த பெருமாள் மணல் லாரி மோதி அகாலமாய் இறந்து போனது ஊரில் பெரியவர்களிடம் வருத்தத்தையும்
சிறுவர்களிடம் பீதியையும் பெருக்கி விட்டிருந்தது.

யாராவது விழுந்துவிட்டால் தூக்குவது போல ஓடி அவர் காலைப் பிடித்து
இழுப்பது பிந்துலவ்வின் பொழுதுபோக்கு. பிந்துலவ் இறந்த அன்று காலேஜில்
கிரிக்கெட் மேட்ச் ஆடிவிட்டு அப்படியே ஹாஸ்டல் பக்கம் போய் பானுப்பிரியா படம் பார்த்துவிட்டு திரும்பும் போது காலமும் எங்க ஊர் பேருந்தும் கடந்துவிட்டது. கூட்ரோடு செல்லும் பஸ்ஸில் ஏறினேன். 
அருகில் நிற்பது யார்? அட நம்ம ஆறு. மனம் நடப்பதுவே பறப்பதுவே என்றாகிப்போனது. இனி அச்சம் என்பதில்லையே! இதேவரிகளை ஆறும் தன் முகத்தில் எழுதி முகவரியை என்னிடம் காட்டினான்.

ஆறுவிடம் சொல்ல என்னிடம் ஒரு நல்ல செய்தியும் ஒரு கெட்ட செய்தியும்
இருந்தன. பானுப்பிரியாவும் பெருமாளும் செய்தியாகி காதுக்குள் புகுந்து
ஆறுவின் கண்களில் கலவரத்தை ஏற்படுத்தினர். என்னைவிட பெரியவனான
பிந்துலவுக்கு ஆறுவிடம் நட்பு அதிகம்தான். முன்னமே சொன்ன கத்தியைக்
கொண்டு காய்ந்த சுள்ளிகளையும் சிமுறுகளையும் சேகரிக்க இருவரும்
ஏரிக்கரையில் சுற்றியதால் வளர்ந்த நட்பு அது. 
ஏரிக்கால்வாயில் முகம் கழுவ
குனிந்த போது கால்வாயில் தள்ளி காலைப் பிடித்திழுத்து தன் நட்பை
அதிரிபுதிரியாய் வெளிப்படுத்தியிருக்கிறான் பிந்துலவ்.

கூட்ரோடு வந்து விட்டது. ஓர் இடுகாடு ஒரு சுடுகாடு இருக்கும் சாலையில்
மூன்று கிலோமீட்டர்கள் நடக்க வேண்டும். அன்று அமாவாசை என்று அடித்துவிட நான் விரும்பவில்லை. ஆனால் சாலையில் புளியமரங்களும் ஆலமரங்களும் ஓரத்தில்
நின்று ஒளியை ஒளித்து விளையாடின. 
அங்கிருக்கும் ஒரு இட்லிகடை
ஊத்திமூடப்பட்டிருந்தது. இருவரும் மெதுவாக நடக்கத் தொடங்கினோம். 

ஏற்கனவே கண்களில் இருந்த பானுப்பிரியாவை வாய் வழியே ஜொள்ளவிட்டான் ஆறு.
இப்போதைக்கு பா.பி.யைப் பற்றிப் பேசுவதே சாலச்சிறந்தது என்ற முடிவை
நடத்துநரிடம் சீட்டு வாங்கும்போதே எடுத்துவிட்டிருந்தேன்.

கொஞ்ச நேரத்தில் பேச்சு பிந்துலவைப் பற்றிப் போனது. கல்யாணத்துக்கு
முதல்நாள் இறந்த அவனது ஆன்மாவைப் பற்றியெல்லாம் பேசினோம். அவனோடு விளையாடிய பல நிகழ்வுகளை ஆறு படரவிட்டான். ஏரிக்கால்வாயில் குப்புறத்தள்ளியதை கவனமாக அவன் தள்ளிவிட்டு மற்றதைப் பற்றிப் பேசினான்.

காட்டேரிக்கரைக்கு முன் இருந்த இருண்ட இடுகாட்டை நாங்கள் உணர்ந்து
பலமாகப் பேசியும் சிரித்தும் சகபயங்களை மரங்களை நோக்கி ஓடச்செய்தோம். கொஞ்சநஞ்ச உடையோடு பானுப்பிரியாவே கூட்ரோடு வரை ஓடி ஏதாவதொரு லாரி பிடித்துப் போகும் அளவுக்கு சிரித்தோம். 

அப்போது பீர் குடிக்கும் பழக்கமில்லாததால் குபீர் என்று அடித்த பூவாசத்தை உணர எஸ்ஸுக்கும் ஆறுக்கும் நேரம் பிடித்தது. 
சட்டென்று நின்ற ஆறு வாயை செயல்நிறுத்தி மூக்கைப் பயன்படுத்தினான். அவன் முகம் வெளிரியது ஒரு ஒளிக்கீற்றில்

(உண்மையில் அங்கே ஒரு தென்னைமரம் இருந்தது) தெரிந்தது.
 என் நிலை இன்னும் மோசம். அதுவே என் கடைசி ராத்திரி என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். 
பயம் இதயத்தில் நின்று நாக்கை உள்ளே இழுத்தது. 
மெதுவாக நடப்போம் என்று இணைந்த கைகள் ஆனோம். 
நாலு எட்டு (தயவு செய்து 32ன்னு சொல்லி நிலைமையை சகஜமாக்க
வேண்டாம்) எடுத்து வைத்தோம். 'தொப்' என்ற சத்தம். ஈரக்குலை நடுங்கிப்
பார்த்திருக்கிறீர்களா? ஆடுது ஆடுது அப்படி ஆடுது. 
கூட நடந்த ஆறு காணவில்லை. பாதாம்கீர் அடச்சே பகீர் என்றது எனக்கு. ஆறு குப்புறப்படுத்தபடி கத்துறான். "எஸ்ஸு ஓடிடு. இங்க நிக்காத".
ஓவென கத்த வேண்டும் போல் இருந்தது. ஆறு கொஞ்சம் கொஞ்சமாக அந்த
சாலைப்பள்ளத்தில் பின்னோக்கி இழுக்கப் படுவதாக தெரிந்தது. அவன் அருகில்
ஓடி கையைப் பிடித்து இழுத்தேன். பயனில்லை. பயம் மட்டும் அப்படியே
இருந்தது. அப்போதும் ஆறு 'ஓடிரு எஸ்ஸு' என்று அனத்துவது கேட்டது.
 என் தளபதியை பாத்தியான்னு பெருமையாக யாரிடமாவது சொல்லவேண்டும் போல் இருந்தது.

வெளிச்சம் வேண்டும். உடனடியாக வேண்டும். மூளை முக்கியது. சட்டென்று
சிக்கி முக்கியது. காட்டேரி அருகில் சுந்தரம் மாமா கிணறு வெட்டுகிறார்.
தளவாடங்கள் காக்க அங்கேயே கட்டில் போட்டு படுப்பது நினைவுக்கு வந்தது.
அவரிடம் தீயசக்தி இருந்தது. உடனே நான் 'சுந்தர மாமாஆஆஆ'ன்னு
பெருங்குரலெடுத்தேன். ஒரு முறையல்ல நான்கு முறை. 
பிந்துலவ் பிடித்தகாலை விடுவதாய் இல்லை. 
ஆனால் கொஞ்சாத நேரத்தில் பக்கவாட்டில் சிறு செவ்வக ஒளி
தெரிந்தது. ஆம் தீயசக்தியுடன் சுந்தரம் மாமா வந்தே விட்டார். அவராலும்
ஆறுவை அல்லாக்கத்தூக்கி மல்லாக்கப் போட முடியவில்லை. 
உயிர்ப்புடன் இருந்த தீயசக்தியை அவன் காலை நோக்கி திருப்பினார்.
 ஒரு மாலையில் (இரவில்தான் கதை நடக்கிறது, இது பூமாலை) ஆறுகால் மாட்டியிருந்தது.அதாவது ரெண்டு கால்.

பிந்துலவ்வே பரவாயில்லை என்னுமளவிறகு சுந்தரம் மாமா சிரித்து
பயமுறுத்தினார். அவரது தீயசக்தி உதவியுடன் வீடடைந்தோம். இப்போது ஊருக்கு சென்றபோது ஆறு தன் மகனுக்கு ப்ளாஸ்டிக்காலான கதாயுதம் வாங்கிக்கொடுத்திருப்பதைப் பார்த்தேன். 

ஆறு வீட்டுக்கெதிரில்தான் இப்போது நாங்கள் இருக்கும் வீட்டைக் கட்டினோம். வசந்தன் கதையை கொண்டுவரும் போது சஞ்சயன்
அவனை கட்டிப் பிடித்து முத்தமிடுவதை பல்சருக்கு அருகில் நிற்கும் என்
அப்பாவின் தீயசக்தியில் அமர்ந்து பார்த்தேன். என் தளபதி திண்ணையில்
அமர்ந்து என்னைப் பார்த்து சிரித்தான்.
 

You Might Also Like

0 comments