எதிர்கால சந்ததியினரின் பயன்பாட்டுக்காக 72 ஆயிரம் ஓலைச்சுவடிகள் டிஜிட்டல் மயம்
பழமையை போற்றும் நோக்கத்திலும், பண்டைய வரலாறுகளை வருங்கால சந்ததியினர் அறிந்து கொள்வதற்காகவும் அவர் இந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அந்த வகையில் 1754-1821-ம் ஆண்டுகளில் ஸ்காட்லாந்து நாட்டிலிருந்து இந்தியாவிற்கு குறிப்பாக தென்மாநிலத்திற்கு வருகை தந்த முதல் நிலஅளவையாளர் காலின் மெக்கன்சி, மற்றும் லேடன், சி.பி.பிரவுன் (1798-1884) ஆகியோர் தொகுத்து வைத்த பனை ஓலை மற்றும் தாட் சுவடிகள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டன.
பழமை வாய்ந்த இந்த பனை ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்ட குறிப்புகள் ஆய்வு மாணவர்கள் உள்பட அனைத்து துறையினரும் பயனடையும் வகையில், 72 ஆயிரத்து 314 பனை ஓலைச்சுவடிகளை தற்போது முதல்கட்டமாக தொல்பொருள் ஆய்வுத்துறை உதவியுடன் தமிழக அரசு டிஜிட்டல் மையமாக்குவதுடன், பழமையான பனை ஓலைச்சுவடிகளை பாதுகாத்தும் வருகிறது.
ஏற்கனவே தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளைச் சேர்ந்த 7 ஆயிரம் சுவடிகள் மொழிவாரி மாநிலம் பிரிக்கப்பட்ட போது, ஆந்திரா, கர்நாடகம், கேரளா ஆகிய மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுவிட்டன. இந்த பனை ஓலைச்சுவடிகளில் இலக்கியம், வரலாறு, தத்துவம், அறிவியல், வட்டார வரலாறுகள், கல்வெட்டுகள், ஆகமங்கள், வேதங்கள், கணிதம், தசாவதாரம் ஓவியங்கள், போன்றவை தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, உருது, அரபு, பாரசீகம் ஆகிய மொழிகளில் உள்ளன.
இச்சுவடிகள் தமிழ்நாடு மற்றும் தற்போதைய ஆந்திர மாநிலத்தின் பல்வேறு வரலாறு மற்றும் பண்பாட்டுச் சிறப்புகளைக் கொண்டுள்ளன. இதுதவிர ஆய்வாளர்கள் வசதிக்காக இலக்கியம், இலக்கணம், யோகம், ரசவாதம், சோதிடம், வரலாறு, வேதாந்தம், வைத்தியம், புராணம், கணிதம், சிற்பம், சைவம், வைணவம், ஜைனம், கிறிஸ்தவம், முகமதியம், சாமுத்திரிகம், இசை மற்றும் பலவகை என 19 வகைகளாக பிரித்து வைக்கப்பட்டுள்ளது. இவற்றில் 50 சதவீதம் நூல்களாக மாற்றப்பட்டுள்ளன. மீதம் உள்ளவை சுவடிகளாகவே பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கீழ்த்திசைச் சுவடிகள் நூலகத்தில் எல்காட் நிறுவனத்தின் ஆலோசனையின் பேரில் இதற்கான பணிகள் நடந்து வருகின்றன. ஜெர்மனி நாட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட இ.ஸ்கேன், ஸ்கேன் மாஸ்டர்-3, பிளாட்பிட் ஸ்கேன் மற்றும் எஸ்.எம்.ஏ-21 என்ற நவீன ரக கருவிகள் உதவியுடன் இந்த பணிகள் நடந்து வருகின்றன. இதில் முதல் கட்டமாக அனைத்து பனை ஓலைச்சுவடிகளும் மைக்ரோ பிலிம் எடுக்கப்பட்டு, பின்னர் கணினியில் பதிவு செய்யப்பட்டு பாதுகாக்கப்படும். இதற்காக முதல்-அமைச்சர் ஜெயலலிதா ரூ.2.84 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உள்ளார்.
இதுகுறித்து தொல்பொருள் ஆய்வுத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
பழமையான வரலாறுகள் அடுத்த தலைமுறையினரும் அறிந்து கொள்ளும் வகையிலும் முதல்-அமைச்சரின் உயரிய லட்சிய நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு நல்கும் வகையிலும் பனை ஓலைச்சுவடிகளை கம்ப்யூட்டர் ஸ்கேனர் உதவியுடன் ‘டிஜிட்டல்’ ஆக்கும் பணி நடந்து வருகிறது. மொத்தம் 72 ஆயிரத்து 314 சுவடிகளில் 26 லட்சம் பக்கங்களை ‘டிஜிட்டல்’ ஆக்கும் பணி நடந்து வருகிறது. இவற்றில் பெரும்பாலானவை 145 ஆண்டுகளுக்கு முற்பட்டவையாகும்.
பனைஓலைச்சுவடிகளில் தமிழில் பாரம்பரியமிக்க திருக்குறள், தொல்காப்பியம் போன்றவையும் இடம் பெற்றுள்ளன. கோவில்களில் உள்ள சுவர்கள் மற்றும் தூண்களில் உள்ள கல்வெட்டுகள், செப்புதகடுகளில் பொறிக்கப்பட்ட வாசகங்கள், கல்பாறைகளில் உள்ள கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ள கருத்துக்கள் 15 ஆயிரம் படிமங்கள் எடுக்கப்பட்டு பல்வேறு துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ளன. அவற்றில் 5 ஆயிரம் படிமங்கள் தற்போது டிஜிட்டல் ஆக்கப்பட்டு வருகிறது.
இந்தப்பணி நிறைவடைந்த உடன் தொல்பொருள் ஆய்வுத்துறையின் இணையதளத்தில் ஓலைச்சுவடிகளில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் நவீனமயமாக்கப்பட்டு வெளியிடப்படுவதன் மூலம் அனைத்துதரப்பினரும் படித்து தெரிந்து கொள்ள முடியும். உள்நாடு மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் ஆராய்ச்சிகளில் ஈடுபடும் அறிஞர்கள், நம்நாட்டின் விலைமதிப்பு மிக்க வரலாறுகளை தெரிந்து கொள்வதற்காகவே தொல்பொருள் ஆய்வுத்துறையின் இணையதள முகவரியில் தகவல்கள் வெளியிடப்பட உள்ளன. இந்த ஆண்டு இறுதிக்குள் பாதி பணி முடிந்துவிடும் என்று நம்பப்படுகிறது.
மத்திய அரசின் தேசிய சுவடிக்குழுமம் அனைத்து மாநிலங்களில் உள்ள பனைஓலைச்சுவடிகளின் அடிப்படை விவரங்களை திரட்டி மென்பொருள் உதவியுடன் சி.டி. யில் பதியும் பணியை செய்து வருகிறது. தமிழகத்தில், சென்னையில் உள்ள தமிழக அரசின் சுவடி நூலகம் மேற்கொள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் உள்ள அனைத்து பனைஓலைச்சுவடிகளின் அடிப்படையில் விவரங்களை திரட்டும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. பல தலைமுறையினர் வாழ்த்தும் வகையில் தமிழக அரசின் இந்த செயல்பாடு, ஒரு மைல்கல்லாகவே திகழும்.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
1 comments
வாழ்க நமது தமிழ் கலாச்சாரம்
ReplyDelete